யாழில் வெளி மாவட்ட சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளால் சிக்கல் - மக்கள் விசனம் !

யாழ் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைத்தியசாலை வீதியில் நீண்டதூர சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் தொடர்ச்சியாக வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
மின்சார நிலைய வீதியிலிருந்து பயணிகளை ஏற்றி சேவையை ஆரம்பிக்கும் குறித்த தனியார் பேருந்துகள் மிக மெதுவாக ஆமை வேகத்தில் ஊர்ந்து மேலும் அதிகளவானவர்களை ஏற்றுவதற்கு நேரத்தினை நகர்த்துவதற்காக வைத்தியசாலை வீதியில் பிரதான பேருந்து நிலையத்தின் முன்பாக நீண்ட நேரம் நடுவீதியில் நிறுத்தப்படுகின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையம், முச்சக்கரவண்டி தரிப்பிடம் காணப்படுகின்ற நகரின் மத்திய பகுதியில் இவ்வாறு பொறுப்பின்றி சரதிகள் நடந்துகொள்ளவதால் ஒருவழிப்பாதையான இப்பாதையில் பின்னால் வரும் வாகனங்கள் செல்லமுடியாது காத்திருந்தே பயணிக்கவேண்டியுள்ளது.
குறித்த இடத்தின் மிக அருகிலேயே பொலிஸ் பரிசோதனை சாவடி காணப்படுகின்ற போதும் பொலிசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றதுடன் அது தொடர்பில் துறைசார் தரப்பினர் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



