நடுநிலை தவறுகிறதா சுவிஸ்?

#SriLanka
Dhushanthini K
3 weeks ago
நடுநிலை தவறுகிறதா சுவிஸ்?

ஐரோப்பாவின் கால்பந்தாட்ட மைதானம் என வர்ணிக்கப்படும் சுவிற்சர்லாந்தை நினைவுபடுத்தும் பல விடயங்கள் உள்ளன. அவற்றுள் பிரதானமானவை சாக்லேட் மற்றும் சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டி. சுவிஸ் கடிகாரங்கள் உலகப் பிரசித்தமானவை. அழகான மலைப் பிரதேசங்கள், தூய்மையான காற்று எனப் பலப்பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அத்தோடு நினைவுக்கு வருவது சுவிசின் நடுநிலைமைக் கொள்கை. நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட நாடாக இருப்பினும் இரண்டு உலகப் போர்களிலும் நேரடியாகத் தலையிடாது, பக்கஞ் சாராது, சமாளித்து தனது நிடுநிலைத் தன்மையை இன்றுவரை பேணி வருகின்றது அந்த நாடு.

2002 பெப்ரவரி 24இல்; ஆரம்பமான உக்ரைன் போர் எவ்வாறு உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் அரசியலையும் பாதித்ததோ அதேபோன்று சுவிஸ் நாட்டின் நடுநிலைக் கொள்கையையும் அது பரிசீலனைக்கு ஆளாக்கி உள்ளது. ரஸ்யா மீது மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்த போது, அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த சுவிற்சர்லாந்து பல பில்லியன் டொலர் பெறுமதியான ரஸ்யச் சொத்துக்களை முடக்கியது. அன்று முதல் சுவிற்சர்லாந்து நாட்டின் நடுநிலைமைக் கொள்கை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள்; நடைபெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

சுவிற்சர்லாந்து நாட்டின் நடுநிலைக் கொள்கை நீடிக்க வேண்டும் என நாட்டின் 91 விழுக்காடு மக்கள் விரும்புவதாக 2023இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது. ஆனாலும், இன்றைய உலகின் துருவமய அரசியல் போக்கில் நடுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடிப்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவ்வளவு இலகுவான விடயமாக இல்லை. அவ்வாறு இருப்பது சிரமம் என்பதும் ஒருவகையில் யதார்த்தமே.

உண்மையின் முன்னே நடுநிலைமை என்பது சாத்தியமற்றதே. ஆனால், எது உண்மை என்பதை யார் வரையறை செய்வது? வரலாற்றில் இன்றுவரை உண்மை என எழுதப்பட்டு வருவது வெற்றி பெற்றவர்களின் சரித்திரமே. தோற்றவர்களின் பக்கம் நியாயம் இல்லை என்பதுவே அதன் கருத்து. ஆனால், அதுவே உண்மையான வரலாறு ஆகிவிடுமா?

மேற்குலகைப் பொறுத்தவரை அரசியல்வாதிகள் தங்களுக்கென சில விழுமியங்களை, அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் உலகப் பொதுமையானவையாக இல்லை என்பதே மிகப் பாரிய சிக்கல். கறுப்பர்களை, ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களை, வெள்ளை நிறத்தில் இல்லாதவர்களை தம்மை விடத் தாழ்ந்தவர்களாகக் கருதும் போக்கு பெரும்பாலான வெள்ளையர்களிடம் தற்போதும் தொடர்வதை மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு உறுப்பு நாடாக இல்லாத போதிலும் அதன் பெரும்பாலான கொள்கைகளை சுவிஸ் நடைமுறையில் கொண்டுள்ளது. பெருளாதார விடயங்களில் மட்டுமன்றி பாதுகாப்பு தொடர்பான விடயங்களிலும் கூட சுவிஸ் பெரும்பாலும் மேற்குலக விழுமியங்களை ஒட்டியதாகவே நடந்து கொள்கிறது. தொடர்ந்தும் அதே பாதையிலேயே நடைபோடவும் முயல்கின்றது.

தமது நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகக் கருதும் நடுநிலைமைக் கொள்கையில் இருந்து சுவிஸ் நாடு விலகிச் செல்வதை விரும்பாத குடிமக்கள் சுவிஸ் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இது விடயத்தில் தடைபோட நினைக்கிறார்கள். அதன் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டின் நடுநிலைமைத் தன்மை தொடர்பில் ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். இதன் ஒரு அங்கமாக சுவிஸ் அரசியலமைப்புக்கு இணங்க ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு சமஷ்டி அரசாங்கத்திடம் கோரிக்கை கையளிக்கப்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வாக்கெடுப்பு இந்த வருடத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமஷ்டி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இந்த வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டு உள்ளது. அதேவேளை, சுவிஸ் அரசாங்கத்தின் நடுநிலைமைக் கொள்கை தொடர்பில் ஆராய்வதற்கென ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. சுவிஸ் நாடு தனது பாதுகாப்பு தொடர்பிலான கொள்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

சுவிஸ் பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த நிபுணர்கள் குழு தனது நூறு பக்க அறிக்கையை ஆகஸ்ட் 29ஆம் திகதி சமர்ப்பித்தது. ஒரு வருடத்துக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்தக் குழு சுவிஸ் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களை மறு வரையறை செய்ய வலியுறுத்தி உள்ளது.

''சுவிஸ் நாட்டின் நடுநிலைமைக் கொள்கை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அது நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் பாதுகாப்பு விடயங்களை உள்ளடக்கியதாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுடனான உறவு உண்மையான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும். அத்தோடு, தேசிய மொத்த வருமானத்தில் 0.75 விழுக்காடாக உள்ள நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் துறை ஒதுக்கீடு 2030ஆம் ஆண்டில் 1.0 வீழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும்'' என இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய இந்த நிபுணர் குழுவில் உள்ள பெரும்பான்மையானோர் போரில் ஈடுபடும் நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதிiயுத் தடை செய்யும் 1998ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிசின் நடுநிலைமைக் கொள்கையை எதிர்ப்பவரான தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் வயோலா ஆமர்ட், அதே கொள்கையைக் கடைப்பிடிக்கும் தனக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு இந்த நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக அறிக்கை வெளியாவதற்கு முன்னரேயே கண்டனங்கள் எழுந்திருந்தன.

இந்த அறிக்கை ஒரு தலைப்பட்சமானது எனக் கண்டித்துள்ள சுவிஸ் நாட்டின் பிரதான கட்சியும், சமஷ்டி நாடாளுமன்றில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்டதுமான சுவிஸ் மக்கள் கட்சி, சுவிஸ் நாட்டின் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள நாட்டின் நடுநிலைமைத் தன்மையை இந்த அறிக்கை உதாசீனம் செய்துள்ளது எனக் கூறியுள்ளது. சுவிசின் நடுநிலைமைக் கொள்கையை அழித்தொழிக்க நினைக்கும் ஆமர்ட் அம்மையார் நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கரங்களில் தன்னை ஒப்படைத்து விட்டார் என்பது இப்போது பகிரங்கமாகத் தெரிகிறது என இந்தக் கட்சி மேலும் சாடியுள்ளது.

சுவிசின் நடுநிலைமைக் கொள்கை தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்புக் கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் கையொப்பங்களைச் சேகரிப்பதில் இந்தக் கட்சியே பின்னணியில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை அது போரிடும் எந்தத் தரப்பையும் ஆதரிப்பதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அதேபோன்று, போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எந்தத் தரப்புக்கும் போர் ஆயுதங்களையோ, ஆயுத தளபாடங்களையோ, உதிரிப்பாகங்களையோ விற்பனை செய்வதில்லை என்ற கொள்கையையும் கொண்டுள்ளது. சுவிஸ் நாட்டின் இந்தக் கொள்கை தற்போதைய உக்ரைன் போரில் மேற்குலக நாடுகள் சிலவற்றுக்கு தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து ஏலவே கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களுக்கான உதிரிப் பாகங்களை அவற்றால் உக்ரைனின் தேவைக்காகப் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டின் குறித்த கொள்கையில் மாற்றம் தேவை என அவை கோரி நிற்கின்றன.

உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ள சுவிஸ் அரசியல்வாதிகள் இந்தக் கொள்கையை மாற்றத் தயாராகி விட்டார்கள் என்பதையே அண்மைய நிகழ்வுகள் கோடிகாட்டி நிற்கின்றன.

சுவிசின் நடுநிலைமைக் கொள்கை நீண்ட வரலாறைக் கொண்டது. அது 1515ஆம் ஆண்டில் இருந்து தொடர்கிறது. சுவிசின் நடுநிலைமைக் கொள்கையைக் கருத்தில் கொண்டே ஐக்கிய நாடுகள் சபையின் பல கிளை நிறுவனங்கள் தமது தலைமையகத்தை சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் அமைத்துள்ளன. ஐ.நா. மனித உரிமைச் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் என்பவை கூட ஜெனீவா நகரிலேயே அமைந்துள்ளன. சுவிஸ் நாட்டின் பெருமைமிகு அடையாளங்களாக விளங்கும் இவற்றின் எதிர்காலம் சுவிஸ் நாடு தனது நடுநிலைமைக் கொள்கையைக் கைவிடும் பட்சத்தில் என்னவாகும்?

தனது பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான நடுநிலைமைக் கொள்கையை சுவிஸ் இழக்கப் போகிறதா, இல்லையா என்பது மக்கள் பொது வாக்கெடுப்பின் முடிவில் தெரிய வரும். நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலான நடவடிக்கை அடுத்த வருடத்திலேயே இடம்பெறும் நிலையில் இந்த மக்கள் வாக்கெடுப்பு உலகின் கவனத்தை ஈர்த்து நிற்பதில் வியப்பேதும் இல்லை.

நன்றி 

சுவிசிலிருந்து சண் தவராஜா!


இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

https://www.youtube.com/@Lanka4media

எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும். 

எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..

https://web.facebook.com/lanka4media

அதேபோல Tiktok 

https://www.tiktok.com/@lanka4media?lang=en

அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும் 

 Follow Lanka4 TWITTER: / lanka4media

மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.  

https://www.instagram.com/lanka4media/?hl=en

 உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு. 

நன்றி.






உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!