சம்பந்தனுடன் 30,40 வருட பழக்கம் என கதை அளப்பார்கள் : மனோ கணேசன்!

இனிமேல் வந்து, சம்பந்தனுடன் எனக்கு முப்பது வருட, நாற்பது வருட, ஐம்பது வருட பழக்கம் என்று அளப்பார்கள். அதையும் உங்கள் சாகாத ஆன்மா எங்கோ இருந்த படி கேட்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனின் மறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில், தான் முதலில் ஒரு இலங்கையன். அப்புறம் தமிழன். ஆனால், சிங்கள பெளத்த இலங்கையன் அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற "பல்லின-பன்மொழி-பன்மத" இலங்கையன். பன்மைத்துவம் என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வோம் என்று உலகறிய சொன்னவர். அப்படி சொல்லி சிங்க கொடியையும் யாழ் மேடையில் தூக்கி காட்டியவர். அதற்காக தமிழ் தேசிய வாதிகளால் கடுமையாக விமர்சிக்க பட்டவர்.
எல்லாவற்றையும் மீறி நல்லாட்சி காலத்தில் ரணில் விக்க்கிரமசிங்கவை நம்பி இரண்டு வருடத்துக்கு குறையாமல், வழிகாட்டல் குழுவில் அமர்ந்து, புது அரசியலமைப்பை எழுதி முடிக்க பாடு பட்டவர்.
அதை நம்பி "தீபாவளிக்கு தீர்வு", "பொங்கலுக்கு தீர்வு" என்று கெடு கூறி அதற்காகவும் விமர்சிக்க பட்டவர். அறிவு, ஆன்மா, உடல் என்ற மனித கூறுகளில், உடலால் மட்டுமே பலவீனமாக இறுதி காலத்தில் இருந்தார்.
அறிவும், ஆன்மாவும் பலம் இழக்கவே இல்லை. நான் அவரது கட்சி அங்கத்தவன் இல்லை. ஆனால், இந்த "சிங்க கொடி முதல் வழி காட்டல் குழு" சம்பவங்கள் வரை எல்லாவற்றையும் மிக பக்கத்தில் இருந்து நேரடியாக பார்த்தவன்.
இப்போது வரிசையாக சிங்கள பெளத்த தேசிய கட்சி தலைவர்கள் வந்து, “சம்பந்தனுடன் எனக்கு முப்பது வருட, நாற்பது வருட, ஐம்பது வருட பழக்கம் என்று அளப்பார்கள். அதையும் உங்கள் சாகாத ஆன்மா எங்கோ இருந்த படி கேட்கும்” எனத் தெரிவித்துள்ளார்.



