இந்தியாவை விட்டு வெளியேறும் லைக்கா! படங்கள் எடுக்கப் போவதில்லையென முடிவு

ஈழத்தமிழரான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா திரைப்பட தயாரிப்பகம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லைக்கா புரொடக்சன் என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் 2014ஆம் ஆண்டில் சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
லைக்கா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது திரைப்படங்களை தயாரிப்பது, மற்றும் பகிர்ந்தளிக்கும் சேவைகளை செய்து வந்தது. ஆரம்பித்த நாட்களில் இருந்து பல முன்னணி கதாநாயகர்களை வைத்து பிரமாண்டமான பட்ஜெட்டில் பல வெற்றிப்படங்களை தயாரித்து வந்தது லைக்கா குழுமம்.
விஜய் இன் கத்தி மற்றும் எந்திரன்2 போன்ற பேசப்படும் வெற்றித் திரைப்படங்களை தயாரித்துள்ளது. தற்பொழுது பல பிரம்மாண்டங்களின் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது.
எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் தான் இந்தியாவில் இருந்து லைக்கா குழுமம் முற்றாக வெளியேறப் போவதாகவும் இந்தியன் 2 திரைப்படமே லைக்காவின் தயாரிப்பில் வெளியாகும் இறுதித் திரைப்படம் எனவும் கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் படங்கள் ஏதும் தயாரிப்பதில்லை என்ற முடிவில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
1000 கோடிக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இந்த முடிவு எடுத்ததாகவும் லைக்கா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ்குமரன் தெரிவித்திருக்கிறார்.
இதன்காரணமாக லைகா குழுமத்தின் ஊடகங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை லைகா குழுமத்தின் மீது நடிகர் விஷால் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என வழக்கு தாக்கல் செய்திருந்தார். பின்னர் விஷாலின் வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கோரி லைகா மனுதாக்கல் செய்திருந்தது.
இதனால் விஷாலிற்கும் லைக்கவிற்கும் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகின்றது.
இந்தநிலையில் லைக்காவின் இந்த முடிவு வெளியாகி இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.



