1,400 கோடியில் கர்நாடகாவில் முதலீடு செய்த இலங்கை தமிழ் கிரிக்கெட் வீரர்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
குளிர்பானம் மற்றும் இனிப்பு வகைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை அவர் ஆரம்பிக்க உள்ளார்.
முத்தையா முரளிதரன் இலங்கையில் குளிர்பானம், இனிப்பு வகை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்தார்.
இதற்காக கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது கர்நாடக அரசு போதிய ஒத்துழைப்பும், சலுகையும் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையின் விரிவாக்கமாகவே, இந்தியாவில் இந்த தொழிற்சாலையை முத்தையா முரளிதரன் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தொழிற்சாலை நிர்மாணத்திற்காக 46 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



