ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - ஜனாதிபதி!

ஈரநிலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி மற்றும் சனத்தொகை பெருக்கத்தினால் இன்று நாடு முழுவதும் சதுப்பு நிலங்கள் அழிந்து வருவதால் அதனை பாதுகாப்பதில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுக்கு முகங்கொடுத்து வெளிநாட்டு நிதிக்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வெப்பமண்டல நாடுகள் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய வணிகத் திட்டங்களில் கவனம் செலுத்தி தங்களுக்குத் தேவையான நிதியைக் கண்டறிய உழைக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வேலைத்திட்டங்களுடன் தென் மாகாணத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான சதுப்பு நிலங்களை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்டன் சமவெளியை அண்மித்து, மற்றுமொரு சுற்றுலா வலயத்தை உருவாக்குவதற்காக 1,000 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஈரநிலப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.



