நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு : காற்றின் வேகமும் அதிகரிக்கும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சம் 100 மி.மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும் என்றும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக ஹலவத்தை வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



