உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்டமூலம் ஜுலையில் அறிமுகப்படுத்தப்படும் - ரணில்!

திருகோணமலையை மையமாக கொண்டு இந்திய அரசாங்கம் அமைக்கவுள்ள கைத்தொழில் வலயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல இந்திய முதலீட்டாளர்கள் தமது முதலீட்டு நடவடிக்கைகளை அங்கு ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய முதலீட்டாளர்களைத் தவிர ஏனைய நாடுகளின் முதலீட்டாளர்களும் இந்த தொழில்துறை மண்டலத்தில் முதலீடு செய்வதில் ஈடுபட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. புதிய பொருளாதார மாற்றச் சட்டத்தின் கீழ் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு உள்ளடக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்டம் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜெயசங்கரிடம் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை நவீனமயமாக்குவது தொடர்பான இருதரப்பு விவாதத்துக்குப் பிறகு, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நிலவும் பிரச்னைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டது.
தோட்ட லைன் அறைகளை தோட்ட கிராமங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தலையீட்டினால் அந்தந்த கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ள .ஜெயசங்கருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்தார்.



