ஆட்கடத்தல்காரர்களை நம்பி ஏமாறும் இலங்கையர்கள் : ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்த இலங்கை வீரரின் துயரம்!

அண்மைய நாட்களில், ரஷ்ய - உக்ரைன் கூலிப்படையில் இலங்கையர்கள் இணைந்து கொள்வதில் உள்ள சிரமங்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு நிலையில் மேலும் இரு இலங்கையர்கள் ரஷ்யாவின் போர்க்களத்தில் இருந்து தமது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
அந்தவகையில் ரஷ்யாவில் போரிடும் இலங்கையர் ஒருவர் கூறும்போது, இலங்கையில் இருந்து வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது. எங்களுக்கு சம்பளம் தருவதில்லை, சம்பாதித்த பணம் பலவந்தமாக எடுக்கப்பட்டது.இப்போது எங்களிடம் பணமில்லை.
தற்போது, எங்களுக்குத் தெரிந்தவரை, சுமார் 100 -, 200 பேர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24, 2022 அன்று, ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மீது படையெடுத்தபோது, அவர்களுக்கு உயர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமை போன்ற சலுகைகள் வழங்கப்படும் என்று கூறி, போரில் போராடுவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து கூலிப்படையினர் நியமிக்கப்பட்டனர்.
இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவத்தினரும் ரஷ்யாவுக்குப் புறப்பட்டிருந்தனர். ஆயுதப்படையில் உயர் பதவிகளை வகித்த குழுவினரே இந்த மனித கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்ய - உக்ரேன் போருக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக அடையாளம் காணப்படவில்லை எனவும், போரில் ஈடுபட்ட பலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



