முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு : பிதிர்க்கடன் செய்ய உறவுகளுக்கு அழைப்பு!

தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற உள்ளதாக நேற்றைய தினம்(11) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தனர் .
இந்நிலையில் இம்முறையும் இரண்டாவது ஆண்டாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்கின்ற நிகழ்வும் இவ்வருடமும் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அதன் ஏற்பாட்டு குழுவினர் இன்றைய தினம்(12.05) அறிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தங்களுடைய உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்ய விரும்புகின்ற உறவுகள் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி காலை 7:00 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்திலே இந்த பிதிர் கடன்களை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் உறவுகளை கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர் .
இதற்காக மக்கள் எந்த ஒரு பொருட்களையும் கொண்டுவர தேவையில்லை எனவும் தாங்கள் தங்களுடைய உயிரிழந்த உறவுகளின் பெயருடன் வருகை தந்து அவரடைய பெயரை கூறி விசேடமாக தமிழ் மொழி மூலமாக அவர்கள் பிதிக்கடன்களை செய்ய முடியும் என்பதுடன், அன்றைய தினம் பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.



