தமிழர் தாயக பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு!
2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் இன்று (12) முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்திய போது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக மாறியிருந்தது.
இதனை விடவும் இந்த கஞ்சியை பெற்றுக் கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு சொல்லவும் எதிர்கால சந்ததிக்கு இந்த வரலாறுகளை எடுத்துச் சொல்லவும் இந்த தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்ப்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில் தமிழினப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (12.05) முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.
புலம்பெயர் மற்றும் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி யில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி பொதுச்சுடர் முன்னாள் பேராளியும் முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழின் படுகொலை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ் நகரிலிருந்து ஆரம்பமானது இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது.
இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சின் ,முன்னாள் உப தவிசாளர் விஜயன் , வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணி தலைவி ஜெயரஞ்சி ,சமூக செயற்பாட்டாளர். சபாஷ் ,அம்பிகை பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை தொடர்ந்து நாளை 13ஆம் திகதி திங்கட் கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.



