சிவனுக்கு உகந்த மஹா சிவராத்திரி தினம் இன்றாகும்!

#SriLanka #Temple #Festival
Mayoorikka
1 month ago
சிவனுக்கு உகந்த மஹா சிவராத்திரி தினம் இன்றாகும்!

சிவனுக்கு உகந்த மஹா சிவராத்திரி தினம் இன்றாகும். இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாக இது, கருதப்படுகிறது. சிவ பக்தர்களுக்கு மஹா சிவராத்திரி மிகவும் விஷேசமானது. 

 300 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வரப்போகும் மஹா சிவராத்திரி தினம் மிகவும் சிறப்பானதென கூறப்படுகிறது.

 இலங்கையில் முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட பஞ்ச ஈஸ்வரங்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்று சிவராத்திரி பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 நான்கு ஜாமப் பூஜைகளுடன் லிங்கோற்பவருக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.

 சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

 சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

 நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். 

அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம். மாதாந்த வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற ஏகாதசி திதிகளில் குறைவான உணவுப்பழக்கத்தை கை கொள்வார்கள். துவாதசி திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத் தவிர்த்து, உப்பைக் குறைத்து, கீரைவகைகளை அதிகமாகச் சேர்ப்பார்கள். 

திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெயை நீக்கி, இனிப்பை சொஞ்சம் சேர்த்து மதியம்1.30 மணிக்குள் உண்பார்கள். சதுர்தசி திதிகளில்(மாத சிவராத்திரி) மதிய உணவு அரை வயிறும் இரவு பால் பழம் உணவாகக் கொள்வார்கள். சிலர் சிவ சிந்தனையில் இருந்து பூஜை, அபிஷேக ஆராதனைகளைச்செய்வார்கள், யோக சாதகர்கள் தியானம் மேற்கொள்வார்கள்.

 மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொள்வார்கள். அதற்குப்பிறகு ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக சிவராத்திரி பூஜையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12 வது மாதம் வருகிற மஹாசிவராத்திரி (சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலம்) அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை மனதில் நிறுத்தி சிவ பூஜையினைச் செய்து மாமாங்க பூஜையினை நிறைவு செய்வார்கள். அதாவது சரியை வழியில் உள்ளவர்கள் பூஜைகள் விரதங்கள்.

 கிரியை வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும் அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச்செய்வது(தியானம்). இதைக்கடைபிடிப்பதால்உடல்நலமும், மனவளமும் காக்கப்படும். சைவசமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜைமுறை என்று விரிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. 

பக்தியும், பூஜைகளும், விரதங்களும், தியான யோகங்களும் எல்லாமே ஈசனை அடைவதற்குத்தான். அதற்கு உடல்நலமும், மனவளமும் அவசியம் என்பதைக்கருத்தில் கொண்டே இத்தகைய நுட்பமான விரத முறைகள் நம் முன்னோர்களால் தரப்பட்டிருக்கிறது. 

அதை அவர்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒட்டியே வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள் என்பதையோசித்துப் பார்க்கும் போது அவர்களின் விஞ்ஞான அறிவு குறித்து ஆச்சரியம் தோன்றுகிறது. மேலும் மெய்ஞானத்தின் ஒருசிறு பகுதியே விஞ்ஞானம் என்பதுவும் புலனாகிறது. அதற்காக நம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் நாளே சிவராத்திரி. 

இந்த விரதத்தை பொருள்உணர்ந்து அனுஷ்டித்தால் சிவனருளால் அனைத்து வரங்களும் கிடைக்கும். மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

 மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது… அடியார்கள், சிவாச்சாரியார்கள், கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரியவில்லை,

 உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.

 உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.