சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக் குறியீடு: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

#India #SriLanka #Death #Tamil Nadu
Mayoorikka
1 year ago
சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக் குறியீடு: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

ஆசையோடு தேசம் காண இருந்தவருக்கு இந்தி அதிகாரம் எமனானது என சாந்தனின் இறப்பு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 அந்த அறிக்கை வருமாறு: தமிழர் தேசக் கனவோடு தாயகம் பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, முழுமை பெறாத நீதி விசாரணையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களில் ஒருவராக 33 ஆண்டுகள் சிறைவாழ்வை அனுபவித்து தாயகம் காண காத்திருந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனும் இயற்பெயருடைய சாந்தன் அவர்களை விரைவில் நாடு திரும்புவார் எனும் தமிழர்களின் எதிர்பார்ப்பும் தாயையும் தாய் மண்ணையும் காண வேண்டும் என்னும் இறுதி ஆசையும் நிறைவேறாமலேயே அவர் உயிர்பிரிந்த செய்தி தமிழர் இதயங்களைக் கனக்க வைத்துள்ளது. 

 பெற்ற மகனை ஒரு முறையாவது உயிருடன் பார்த்து விட வேண்டுமென்ற தாய்க்கும் – மகனுக்கும் இடையிலான 33ஆண்டுகள் பாசப் போராட்டத்தில் சாந்தன் அவர்களின் இழப்பு அனைவரையும் வெடித்தழ வைக்கின்றது. இறப்பு நிகழ்ந்த 28ஆம் திகதி காலையில் கூட மகன் வருவான் என்று கோவில் தீர்த்தத்துடன் காத்திருந்த தாய்க்கு வாழ்நாள் ஏக்கம் கனவாய்ப் போனது பெருந்துயர்! 

 ஏதும் அறியா இளைஞனாக தமிழகம் வந்தவரை மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாகச் சிறைப்படுத்தி, சித்திரவதை செய்து நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களின் பின்னர் 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய ஒன்றிய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் இயற்கை நீதிக்கு முரணாக தொடர்ந்து 15 மாதகாலம் திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பில் வைத்திருந்து உடல், உள ரீதியாய் பலவீனப்படுத்தி சிறுகச் சிறுகச் கொன்று தாயையும் தாய் மண்ணையும் காண ஆவல் கொண்டிருந்தவரை இன்று உயிரற்ற சடலமாய் அனுப்பி வைத்திருக்கிறது இந்தியம். 

 பாரத தேசத்தின் பிராந்திய நலன்களிற்கு எதிராகச் செயற்பட்டு தொடர்ந்தும் அவமதித்து வரும் சிறிலங்கா அரசுடன் நட்புப் பாராட்டும் காந்தி தேசம், தங்களின் அற்ப பூகோள நலன்களிற்காக தங்களை நோக்கி என்றுமே நேசக்கரம் நீட்டும் ஈழத்தமிழ் மக்களைத் வஞ்சிப்பதென்பது அந்த நாடு இதுவரைகாலமும் தான் கொண்ட வரலாற்றிற்கும் பெருமைகளிற்கும் இழுக்கானதாகும். 

அன்று முதல் இன்று வரை காந்தியின் பெயர்கொண்டு, புரியும் கொடுரங்களால் தனக்கு மேல் போர்த்திய போர்வை களைந்து நிர்வாணமாய் நிற்கின்றது காந்தி தேசம். நேற்று வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற வாதங்களில் தமிழக அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி தமிழக அரசே சாந்தன் அவர்களை விடுவிப்பதில் காலந்தாழ்த்தியது எனும் துயரச் செய்தி, எமக்காய் தமிழக உறவுகளும் தமிழக அரசும் நிற்பார்கள் என்று நம்பும் ஈழத்தமிழ் மக்களிற்கு துரோகச் செய்தியாய்ப் போனது இன்னுமொரு பெருந் துயரம்! சாந்தன் அவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கு இறுதி ஒரு மாதகாலத்திற்குள் காணப்பட்ட ஏதுநிலையை குறிப்பிட்ட சில காலங்களிற்கு முன்னதாகவேனும் உருவாக்கிட நடவடிக்கை ஏதும் எடுத்திருந்தாற் கூட பெற்ற தாயைக் காண வேண்டும் எனும் இறுதி ஆசையையேனும் நிறைவேற்றிக் கொடுத்திருந்திருக்கலாம். 

ஆனால், ஏழு தமிழர்கள் இந்திய ஒன்றிய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒன்றாண்டு காலப்பகுதிக்குள் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் கூட்டாக ஒரு தீர்க்ககரமான தீர்மானங்களெதனையும் மேற்கொள்ளாது, அசமந்தமாகவும் அலட்சியப் போக்குடனும் செயற்பட்டமை என்பது மன்னிக்க இயலாத கண்டனத்திற்குரியதொன்று. நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் இயற்கை நீதிக்கு விரோதமாக சிறப்பு சித்திரவதை முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ளவர்களையும் விடுதலை செய்து ஈழத்தமிழர்களை சிதைத்தெடுக்கும் சித்திரவதை முகாமிற்கு இனியாவது முடிவுரையெழுத இந்திய ஒன்றிய, மாநில அரசுகளை வேண்டுகின்றோம். 

 ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு, தாயகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்களை அழைத்து வர இனியாவது உரிய நடவடிக்ககை எடுக்குமாறு ஈழத்தமிழ் அரசியல் தரப்புக்களையும் சிறிலங்கா, இந்திய அரசுகளையும் வலியுறுத்துகின்றோம். 

 நீதியைக் காத்து நிலைநாட்டுவதில் பக்கம் சாராமல் இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களின் விடுதலைக்கான காலம் வரையில் காலத்திற்குக் காலம் எத்தனையோ வாய்ப்புக்களை வழங்கியும் இந்திய ஒன்றிய அரசும் தமிழக அரசும் தொடர்ச்சியான சட்ட செயற்பாடுகளின் மூலம் தாமதப்படுத்தியமை என்பது ஈழத்தமிழ் மக்களின் மீதான கசப்புணர்வையே வெளிப்படுத்தியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. 

இனிமேலாவது ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளிற்கு விரோதமான செயல்களிற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க உளச்சுத்தியுடன் இந்திய அதிகாரம் செயற்பட வேண்டுகின்றோம். 

 உயிரோடு வந்தவரை இன்று உயிரற்று அனுப்பி வைத்துள்ளது பாரதம்! சாந்தன் அவர்களின் இறப்பு – காந்தி தேசத்தின் அவலக் குறியீடு! – என்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!