32 வருட சிறை வாழ்க்கை; சாந்தன் கடந்து வந்த பாதை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார்.
விடுதலையான பின்னரும் அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து அவருக்கு மேலும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் காலை உயிரிழந்துள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 32 வருடம் சிறையில் இருந்தார்.
ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட சிவராசனின் உதவியாளராகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் சாந்தன் என்ற சுதேந்திரராஜா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 1990-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கையிலிருந்து இந்தியா வந்த சாந்தன், கோடம்பாக்கத்தில் இருந்த மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இஞ்சினீயரிங் டெக்னாலஜியில் படித்தார்.
இந்த காலகட்டத்தில் சிவராசனுக்காக ஈ.பி.ஆர்.எல்.எஃப். போராளிக் குழுவினரை உளவு பார்த்ததாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கூறின. பத்மநாபாவின் படுகொலைக்குப் பிறகு, இலங்கைக்குத் திரும்பிச் சென்ற சாந்தன், மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிவந்து ராஜீவ் காந்தியின் கொலையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அடையாள மாறுபாட்டின் காரணமாகவே கைதுசெய்யப்பட்டதாக சாந்தன் தொடர்ந்து கூறிவந்தார்.
இந்தநிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்திருந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அகதிகள் முகாமில் சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாந்தன் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அவர் தற்போது உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததுள்ளார். ''ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்ட பின்னரும் அவர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இலங்கைக்கு அனுப்புவோம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அனுப்பப்படவில்லை. இந்நிலையில் முகாமில் சரியான வசதிகள் இல்லாததாலும், மருத்துவ வசதி இல்லாததாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்துள்ளார்.
இன்று இரவு அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு செல்வதாக இருந்தது. இதற்கிடையில் இவர் உயிரிழந்துள்ளார்'' என சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிடடிருந்தார்.
1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில், 1991 ஜூலை 22 ஆம் திகதி சாந்தன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 1998 ஜனவரி 28 ஆம் தேதி, 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம்.
அதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மே 11 ம் திகதி 26 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 8 ஆம் தேதி தூக்கு தண்டனையை குறைக்கக் கோரிய சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
1999 அக்டோபர் 10ஆம் திகதி நால்வரும் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர். 1999 அக்டோபர் 29ஆம் திகதி அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். 1999 நவம்பர் 25 ஆம் திகதி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவில்லை. 2000 ஏப்ரல் 26ஆம் திகதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.
குடியரசுத் தலவர்களாக இருந்த கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பிறகு வந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டனர். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் 2011 ஆகஸ்ட் 12ஆம் திகதி கருணை மனுக்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் விளைவாக தமிழ்நாட்டில் அதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.
பின்னர் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவரும் சேர்ந்து, தாங்கள் அதிக வருடங்கள் சிறையில் கழித்துவிட்டோம் என்று, தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 2014 பிப்ரவரி 18ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
2014 பிப்ரவரி 19ஆம் திகதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் விடுதலை என ஜெயலலிதா அறிவித்திருந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி சிபிஐ விசாரித்த வழக்குகளில் எடுக்கும் முடிவை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று கூறி, மத்திய அரசுக்கு தெரிவித்த போது, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி விடுதலைக்குத் தடை பெற்றது. பின்னர் நடைபெற்ற அந்த வழக்கில், 2015 டிசம்பர் 2 மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிக்க முடியாது என நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா அமர்வு தீர்ப்பளித்தது. 2016 மார்ச் 2 ஆம் திகதி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 2018 மார்ச் 6 , 7 பேரை விடுவிப்பு தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பளித்தது. 2018 டிசம்பர் 6ஆம் திகதி 161 சட்ட விதிப்படி ஆளுநர் இறுதி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
இருப்பினும் அவர்களில் பேரறிவாளனைத் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
வரலாற்றில் இடம்பிடித்த துயர சம்பவமான ராஜீவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 7 பேரில், சாந்தன் சொந்த நாடு திரும்பாமலேயே உயிரிழந்துள்ளார்.



