புதிய சுகாதார அமைச்சரின் கீழும் ஊழல் மோசடிகள் அரங்கேறுகின்றன :GMOF அதிகாரிகள் குற்றச்சாட்டு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தில் (SPC) மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்ந்ததாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் (GMOF) கூறியுள்ளது.
சுகாதார அமைச்சுக்கு புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னரும் இந்த பிரச்சினைகள் தொடர்வதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
GMOF தலைவர் டொக்டர். ருக்ஷான் பெல்லானவின் கூற்றுப்படி, சரத் லியனகே அரச மருந்து கூட்டுத்தாபனத்தில் (SPC) முன்னாள் தலைவர் பதவியில் இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டன. எவ்வாறாயினும், அதே டெண்டர்கள் புதிய SPC தலைவரின் கீழ் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார், மதிப்புகள் அவற்றின் முந்தைய தொகையை விட பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திருத்தப்பட்ட டெண்டர் நடைமுறைகள் பற்றி புதிய அமைச்சர் அறிந்திருந்தும், அவர் மௌனமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார் எனவும் இதன் விளைவாக GMOF இந்த நிலை குறித்து கவனத்தை ஈர்க்கவும், அமைச்சரிடம் இந்த விவகாரத்தை எடுத்துரைக்கவும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு தற்போது அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும் குறைந்தது 300 அவசரகால மருத்துவ பொருட்கள், அதாவது புற்றுநோய் மற்றும் இதய அறுவை சிகிச்சை நோயாளிகள் பற்றாக்குறை பட்டியலில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைகள் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் இறந்துள்ளதாகவும் மேலும் சிலர் மரண பயத்தில் இருப்பதாகவும் GMOF தலைவர் கூறினார்.



