குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கெஹலியவிற்கு அழைப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
நாட்டுக்கு 22,500 தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக அவர் நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் நேற்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.
இந்தநிலையில், அவரை இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலத்தை வழங்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனபடிப்படையில் அவர் இன்றைய தினம் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சுற்றாடல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் நேற்று நீதிமன்றினால் விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், தாம் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.



