மணல் மாபியாக்கள் தொடர்பில் டக்ளஸ் விடுத்துள்ள பணிப்புரை!

கண்டாவளையில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
குறித்த பகுதியில் மணல் மாபியாக்கள் கனரக வாகனம் கொண்டு அச்சம் இல்லாது சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அதனையடுத்து, பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் மாவியாக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மூன்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்து அமைசர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளார்.
குறித்த சம்பவம் மிக கவலையளிப்பதாகவும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் நம்பிக்கையடைந்த தான் இந்த செயற்பாட்டினை கட்டுப்படுத்த தவறிய நிலையில் பொலிசார் மீது இருந்த நம்பிக்கையை இழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
குறித்த பிரச்சினையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இராணுவத்தினரின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் ஜனாதிபதியுடன் பேசி அதற்கான ஏற்பாட்டினை செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
குறித்த பிரச்சனைக்கு 10 நாட்களுக்குள் விசேட கூட்டம் ஒன்றின் ஊடாக தீர்வு பெற உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு தொடர்பில் கண்காணித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர் T. பிருந்தாகரன், கிராமசேவையாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



