மஹிந்தவிற்கும் ரணிலுக்கும் முதுகெலும்பு இருந்தால் மக்கள் மத்தியில் வாருங்கள் பார்ப்போம் - சஜித் பகிரங்க சவால்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவிக்கையில், இன்று ஒரு வரலாற்று தருணம். இந்த நாட்டை அழித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றிய மாபெரும் ஜனநாயகப் புரட்சியை ஆரம்பித்தவர்கள் நாங்கள்.
இப்போது நாட்டை ஆளும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்க முடியாது. இந்த அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொன்று மிக மனிதாபிமானமற்ற அழுத்தத்தை மக்கள் மீது செலுத்தி நாட்டில் உள்ள இருநூற்றி இருபது இலட்சம் பேரை பட்டினியில் இடும் கேவலமான அரசாகும். ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் முதுகெலும்பு இருந்தால் வாக்களித்து மக்கள் முன் வாருங்கள் எனவும் எதிர்ப்புப் பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு பயப்படவில்லை என்று கூறுகிறோம். இது வெறும் ஆரம்பம் தான். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம், எங்களுக்கு தேர்தல் வேண்டும். நாங்கள் மக்களின் ஆசியுடன் ஆட்சிக்கு வருகிறோம்.
தலைகளை மாற்றும் விளையாட்டினாலோ அல்லது முரட்டு ராஜபக்சவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டோ அல்ல. மக்களின் ஆசியால் ஆட்சிக்கு வருகிறோம். இன்று இந்த அரசாங்கம் மக்களை கண்டு அஞ்சுகிறது.
நான் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் சொல்கிறேன் உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் முன்வாருங்கள். இந்த நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் எமது அரசாங்கத்தில் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறுகின்றோம்.
மக்களுக்கு நீதி வழங்குவோம்.
நாட்டை திவாலாக்கியது யார் என்பதை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரச அதிகாரம் பெறுவதற்கு முன்னரே அந்த முடிவை எடுத்தோம். அந்த முடிவின் மூலம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களிடமிருந்து இழப்பீடு பெறுவதற்கு தேவையான சட்ட ஆதரவை வழங்கி எங்கள் கடமையை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.



