பரபரப்பாகும் தேர்தல் களம் : உருவாகும் புதிய கூட்டணிகள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றதுடன், இது தொடர்பில் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மைத்திரியின் தலைமைக்கு ஒரு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இல்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 50 சதவீத பெரும்பான்மை பலத்தை கூட்டணியில் வைத்திருப்பதுடன், 50 சதவீத அதிகாரத்தை ஏனைய கட்சிகளுக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மைத்திரிக்கு தலைமைத்துவ சபை உருவாக்கவும், கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஏற்ப தலைமைத்துவ குழு நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி வெற்றிலை சின்னம் அல்லது நாற்காலி சின்னத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும், அது குறித்து எதிர்காலத்தில் பேசி முடிவெடுக்க தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் நிமல் லான்சா தலைமையிலான புதிய கூட்டமைப்பு தனது முதலாவது சந்திப்பின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனதா விமுக்தி பெரமுனவின் பழைய சித்தாந்தம் கொண்ட பல குழுக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன் புதிய கூட்டணியின் பிரதான கூட்டத்தை கொழும்பில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் திலங்க சுமதிபாலவும் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இதுவரையில் உறுதியான இணக்கப்பாட்டுக்கு வரவில்லை எனவும், அதுபற்றி உடனடியாக தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் குழுக்கள், தேர்தல் நடவடிக்கைக் குழுக்கள், வாக்களிப்பு நிலையப் பிரதிநிதிகள் நியமனத்தை மார்ச் 1ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யவும், தொகுதிக் குழுக்கள், இளைஞர், பெண்கள் சார்பான அமைப்புக்களை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி திரு. மைத்திரிபால சிறிசேன அனைத்து ஆசன அமைப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.



