இலங்கையின் பொருளாதாரத்தின் மீது சர்வதேசம் நம்பிக்கை! சாகல ரத்நாயக்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் சர்வதேச சமூகத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற '2024 வரவு செலவுத்திட்டம்' கருத்தரங்கின்போது சாகல ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற போது நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் மற்றும் மணிக் கணக்கில் மின்வெட்டு ஏற்பட்டது.
அப்போது அமுல்படுத்தப்பட்ட வரிக் கொள்கையால், அரச வருமானம் சரிவு, தவறான விவசாயக் கொள்கை, வரிக் கோப்புகள் குறைப்பு போன்ற காரணிகளால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கொவிட் நோய்த்தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், அந்நியச் செலாவணியும் வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து நடந்த போராட்டத்தால், பொருளாதாரச் சரிவு உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்தது.
மக்கள் தொழில்களை இழந்தனர். இவ்வாறானதொரு நெருக்கடி நிலையிலேயே தற்போதைய ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றார். அவர் விவசாயக் கொள்கையை மாற்றி அரிசி உற்பத்தியைப் பெருக்கினார்.
இதனால் உணவுத் தட்டுப்பாடு குறைந்தது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் புதிய வேலைத் திட்டத்திற்கு இணக்கம் காணப்பட்டது. அதன்படி, நிதி சீர்திருத்தங்கள், சட்ட மறுசீரமைப்புகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் இறங்கியது.
புதிய வரி விதிப்பினால் மக்கள் மீது சில அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கையில் இலங்கையின் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. இலங்கை மீது சர்வதேச நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.



