சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளளவு அதிகரிப்பு : நிலைமை மோசமாகியுள்ளதாக தகவல்!

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு.துஷார உபுல்தெனிய இன்று (23.01) தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தேசிய தணிக்கை அலுவலகம் சமீபத்தில் "சிறைகளில் நெரிசல் மேலாண்மை குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கை"யை வெளியிட்டது.
பிரதம கணக்காய்வாளர் டபிள்யூ.பி.சி விக்ரமரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அவ் அறிக்கையில், 2022 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,291 ஆகும், ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அன்று 26,176 ஆக காணப்பட்டது.
இதன்படி, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் கொள்ளளவு 232% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலைமை மோசமாகியுள்ளதாகத் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், தெரிவித்துள்ளார்.
மேலும் தணிக்கை அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2022க்குள் மொத்த கைதிகளில் 53% பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 சிறைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறை இருப்பதாகவும், 287 கழிப்பறைகள் பழுதுபார்க்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், சிறைக்கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.



