கலாட்டா திரில்லர் என சக்கை போடும் ‘ஜிகிரி தோஸ்து’ திரைவிமர்சனம்

#Cinema #TamilCinema #Lanka4 #திரைப்படம் #லங்கா4 #தமிழ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
4 months ago
கலாட்டா திரில்லர் என சக்கை போடும் ‘ஜிகிரி தோஸ்து’ திரைவிமர்சனம்

நட்புக்கு முதலிடம் தரும் மூன்று நண்பர்கள் மனச்சோர்வான தருணத்தில் ஒருநாள் சுற்றுலா கிளம்புகிறார்கள், விதிவசத்தால் அது பெரும் த்ரில்லர் கலாட்டாவாக மாறிவிடும் ஒரு வரிக்கதை ஈர்க்கிறது. 30 வயதுக்கு உட்பட்ட புதிய தலைமுறை இயக்குநர்கள், அதிகமும் ‘சீரியஸ்’ ஒன்லைனர்களைக் கொண்டு கடந்த ஆண்டு படங்களைக் கொடுத்தனர். 

அவற்றைப் பெரும்பாலும் த்ரில்லர் வகைப் படங்களாகவே கொடுத்தனர். அந்த வரிசையில் அறிமுக இயக்குநர் அரன்.வி. எழுதி, இயக்கி, மூன்று நண்பர்களில் ஒருவராகவும் நடித்திருக்கும் ‘ஜிகிரி தோஸ்து’, சீரியஸ் கதை இல்லை என்றாலும் விறுவிறுப்புப் பஞ்சமில்லாத த்ரில்லர் திரைக்கதையால் ஈர்க்கிறது.

 கோலிவுட்டில் புகழ்பெற்ற நடிகனாகிவிட வேண்டும் என்கிற கனவை வரித்துக்கொண்டிருக்கிறார் ரிஷி (ஷாரிக் ஹாசன்). பொறியியல் கல்லூரி மாணவரான விக்னேஷ் (அரன் வி), 500 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் ஸ்மார்ட் போனில் என்ன பேசினாலும் அதைக் கண்டறியும் ‘டெரரிஸ்ட் டிராக்கர்’ என்கிற கருவியைத் தனது கல்லூரிப் புஜெக்டாக உருவாக்குகிறார்.

 வசதியான குடும்பத்துப் பையனான லோகியோ (விஜே ஆஷிக்) வம்பு தும்பு எதிலும் சிக்கிவிடக் கூடாது என இருப்பவர். இந்த மூவரும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒருநாள் டே ரைட் செல்ல, அந்த வழியில், இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அந்தக் காட்சியை அப்படியே கடந்து செல்ல ரிஷிக்கு மனமில்லை.

 ஏனென்றால் ரிஷிக்குத் தனது காதலியான திவ்யாவின் (அம்மு அபிராமி) நினைவு வருகிறது. கடத்தப்படும் பெண்ணை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று ரிஷி துடிக்க, விக்னேஷ் அதற்கு ஓகே சொல்கிறார். லோகி, கிலியுடன் நடுங்கிப் பின்வாங்குகிறார். அவரையும் தங்கள் வழிக்குக் கொண்டுவந்து இணையும் நண்பர்கள், அந்தப் பெண்ணை எப்படி மீட்டார்கள், அதற்காக அவர்கள் செய்த தந்திரங்களும் சாகசங்களும் என்ன, அதிலிருந்த பலவீனங்களும் அதன் பலன்களும் அவர்களை எவ்வாறு பாதித்து என்பதுதான் படம்.

images/content-image/1703929822.jpg

 நண்பர்களின் கதாபாத்திரங்களை எழுதுவதில் வெரைட்டி காட்டியிருக்கும் இயக்குநர் அரன், கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்குக் கதையில் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டார். 

என்றாலும் காதலனின் நடிகன் கனவுக்கு உதவிட பல வகையில் முயற்சிக்கும் காதலியாக அம்மு அபிராமி வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. திரைக்கதையின் போக்கை விறுவிறுப்பாக்கும் ‘டெரரிஸ்ட் டிராக்கர்’ புராஜெக்டை, தனது ஆசிரியர் முன்பு டேமோ செய்கையில், அது வேலை செய்யாமல் போகும்போதே.. அதை வைத்து இந்த நண்பர்கள் கூட்டணி சுவாரஸ்யமாக ஒன்றைச் செய்யப்போகிறது என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள். 

அந்த எதிர்பார்ப்பைத் திரைக்கதையில் செவ்வனே நிறைவேற்றிவிடுகிறார் இயக்குநர். நண்பர்கள் படமென்றால் ‘ஒன்லைனர்’ நகைச்சுவையை சரமாகத் தொடுக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவுக்குள் தலையைக் கொடுக்காமல், கதையை நகர்த்துவதில் கவனம் செலுத்தியிருப்பது விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. 

அதேநேரம் அளவான நகைச்சுவையும் படத்தில் உண்டு. உயர் காவல் அதிகாரி ஒருவர் கதாநாயகனுக்கோ, அவர்களைச் சார்ந்தவர்களுக்கோ மிகவும் தெரிந்தவராக இருப்பது என்கிற ‘டெம்பிளேட்’டை தவிர்த்திருக்கலாம். என்றாலும் காவல் அதிகாரியாக வரும் கௌதம் சுந்தர்ராஜன் ஏற்றுள்ள கதாபாத்திரம், கதையை அடுத்த கட்டத்துக்கு அழகாக நகர்த்திச் செல்கிறது.

 படத்தின் ஈர்ப்பான அம்சங்கள் என, திரைக்கதை, அதில் நிகழும் சம்பவங்கள், மூன்று நண்பர்களின் நடிப்பு. அஸ்வின் விநாயகமூர்த்தியின் கச்சிதமான பின்னணி இசை, மகேஷ் மேத்யூவின் புத்திசாலித் தனமான சண்டைக்காட்சிகள் வடிவமைப்பு ஆகியவற்றைக் கூறலாம்.

பவித்ரா லட்சுமி, அம்மு அபிராமி என இரண்டு இளம் கதாநாயகிகளை வைத்துக்கொண்டு அவர்களை திரைக்கதைக்குள் உறுகாய் ஆக்கியிருப்பதற்குப் பதிலாக, பெண்ணும் சாகசம் செய்வால் என கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் படம் ஈர்த்திருக்கும்.

 இருப்பினும் த்ரில்லர் திரைக்கதையில் திருப்பங்களை செயற்கையாக அமைத்துவிடமால் பார்த்துக் கொண்ட காரணத்துக்காகவே இந்த நண்பர்களின் சாகத்தை அயர்ச்சி இல்லாமல் மகிழ்ச்சியுடன் ரசிக்க முடிகிறது.