மாணவர்களை தாக்கும் ஆசிரியர்கள்: சொல்லி நிற்கும் செய்திகள் என்ன.!!!
ஆசிரியர்கள் மூவர் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் முன்னிலையில் கைகலப்பு - உயர்தர மாணவியை மிகக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் - சொல்லி நிற்கும் செய்திகள் என்ன..
கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் ஆன்மா, அது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு செல்கிறது என ஜி.கே செஸ்டர்டன் குறிப்பிட்டுள்ளார்.
மாதா பிதா குரு தெய்வம் என்ற வைப்பு முறைக்குள், அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்த நிலைக்குள் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் ஒரு சிலர், தற்காலத்தில் நடந்துகொள்ளும் விதம் அருவருக்கத்தக்கதாகவே காணப்படுகிறது. அன்னையைப் போன்ற அரவணைப்பையும் தந்தையைப் போன்ற அன்பையும் கொடுக்கும் மகோன்னதமான சேவை ஆசிரியர் சேவை.
மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் கருவியாக காலாதி காலமாகவே ஆசிரியர்களே இருந்து வருகிறார்கள். தமது இன்ப துன்பங்களையெல்லாம் கடந்து, உன்னதமான தன்னலமற்ற கல்வியைப் புகட்டும் ஆசிரியர்கள் ஒருபடி மேலானவர்கள் என்றே கூறலாம். இருந்தும் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக பிறழ்வுகள் காரணமாகவும் அதிகரித்துள்ள மன உளைச்சல்கள் காரணமாகவும், ஒரு சில ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதம் அனைவர் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் வவுனியா மாவட்டத்தில், கிராமப்புற பாடசாலையின் உயர்தர மாணவி ஒருவரை, ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்யுமளவிற்கு மிகக் கொடூரமாகத் தாக்கியிருந்தார்.
இதற்கு அடுத்தபடி மேலாக, ஆசிரியர்கள் மூவர் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் முன்னிலையில் கைகலப்பில் ஈடுபட்டதோடு, வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையிலேயே இவ்வாறான முகம்சுழிக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டிய ஆசிரியர்களில் ஒருசிலர் இவ்வாறு தரக்குறைவாக நடந்துகொள்வது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அபகீர்த்தியையே ஏற்படுத்திவிடும்.
ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவ் மாற்றத்தை தந்தை, தாய், ஆசிரியர்கள் என்ற மூன்று வகையினரால் மாத்திரமே முடியும் என டாக்டா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களை எவ்வாறு கையாள்வது, சக ஆசிரியர்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையை தெரிந்துகொள்ள ஆரிசியர்கள் மத்தியில் உளநல ஆலோசனைக் கற்கை நெறியை அமுல்படுத்த வேண்டும். இதனூடாக குரோதமற்ற மன நிலை உருவாகுவதன் ஊடாக மாணவர்களை இலகுவாக கையாள முடியும்.
வாழ்நாளில் ஒரு நல்ல ஆசிரியர் சில சமயங்களில் குற்றவாளியை திடமான குடிமகனாக மாற்றலாம் என பிலிப் வைலி குறிப்பிட்டுள்ளார். ஆகவே குற்றவாளியைக்கூட நல் மனிதனாக மாற்றக்கூடிய சக்தி ஆசிரியர்களிடத்தில் இருக்கும் நிலையில், அவர்களே குற்றவாளிகள் ஆகுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவிடத்து ஆரோக்கியமான கல்விச் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே திண்ணம்.
-நன்றி
ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன்-