ஐ.தே.கவின் அரசியல் செயற்பாடுகளை புதிய தலைமைத்துவ சபையின் ஊடாக நடைமுறைப்படுத்த தீர்மானம்!
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை புதிய தலைமைத்துவ சபையின் ஊடாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ருவான் விஜேவர்தன, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், சாகல ரத்நாயக்க, ஹரீன் பெர்னாண்டோ, நவீன் திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக முழுநேரம் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய மற்றும் தேர்தலில் போட்டியிடாத ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். அடுத்த வாரம் நியமனம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்படவில்லை என அக்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலைமையின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபைக்கு பல பொறுப்புகள் மற்றும் கடமைகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், எதிர்வரும் வருடம் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும், அதற்குத் தேவையான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ஐ.தே.க.வின் புதிய தலைமைத்துவ சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.