மன்னாரில் களைக்கட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
நத்தார் மற்றும் புதுவருட திருவிழாக் காலத்தை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக திருவிழா வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்னார் நகர சபை விசாரணைகளின் அடிப்படையில் 300 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் தென்மாநில வியாபாரிகள் குத்தகை அடிப்படையில் இடத்தை வாங்கி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் குறித்த பண்டிகை வியாபார நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
மழை பெய்தாலும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் மக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி செல்கின்றனர். கடந்த காலங்களை விட இம்முறை அதிகளவில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
அதேவேளை, இம்முறை மன்னார் நகர சபைக்கு பண்டிகை வர்த்தக நிலையங்களை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியில் இரண்டு கோடியே இருபது இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த நிதியானது மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு செலவிடப்படவுள்ளது.