அரச அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டு உரிமையை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
அரச அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டு உரிமையை மக்களுக்கு இலவசப் பத்திரங்கள் மூலம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து தெளிவான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று விரைவில் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை சுதந்திரப் பத்திரங்கள் மூலம் மக்களுக்கு மாற்றுவதில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு 8351 வீடுகளுக்கு இலவசப் பத்திரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காணி உரிமை தொடர்பான பிரச்சினைகள், வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பான பிரச்சினைகள், உத்தரவாதங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சில பரிந்துரைகளைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.