இலங்கை இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை! சர்வதேச அமைப்பு அறிக்கை

#SriLanka #Sri Lanka President #government #Red Cross
Mayoorikka
1 year ago
இலங்கை இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை! சர்வதேச அமைப்பு அறிக்கை

சீர்குலைவடைந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு இலங்கை இன்னமும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது.

 இப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக வேலையின்மை, சிறுவர் மந்தபோசணை, பொதுச்சுகாதாரக் கட்டமைப்பில் இடைவெளிகள், புத்திஜீவிகள் உள்ளடங்கலாகப் பெருமளவானோரின் புலம்பெயர்வு போன்ற நீண்டகாலப் பாதிப்புக்களுக்கு நாடு முகங்கொடுத்திருப்பதாக செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

 இலங்கையின் முதல் அரையாண்டு (ஜனவரி - ஜுன்) பொருளாதார நிலைவரம் குறித்து செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 உயர் பணவீக்கம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, உணவுப்பாதுகாப்பின்மை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருத்துவசேவை வழங்கலில் இடையூறு, மின்விநியோகத்தடை, வாழ்க்கைத்தர வீழ்ச்சி போன்ற காரணங்களினால் இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது.

 முற்றுமுழுதான சேதன விவசாயத்திட்டம் தோல்வியடைந்தமை அடுத்து உள்நாட்டு விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்நெருக்கடியைத் தீவிரப்படுத்தியது.

 நாட்டில் சமாதானத்தை நோக்கிய நிலைமாற்றம் இடம்பெற்ற 2010 - 2016 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.2 சதவீதமாகக் காணப்பட்டது. இருப்பினும் அதன்பின்னரான ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் மந்தகரமடைந்ததுடன், கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று காரணமாக 2020 இல் பொருளாதாரம் 3.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது.

 அதனைத்தொடர்ந்து உலகளாவிய பொருளாதாரச் சுருக்கம், பொருட்களின் விலையேற்றம், நலிவடைந்த சுற்றுலாத்துறை மற்றும் நிதிப்பற்றாக்குறை என்பன ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கு வழிகோலின.

 அதுமாத்திரமன்றி இந்நெருக்கடியானது நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையானோர் வறுமை, நலிவுற்ற நிலை போன்றவற்றுக்கு முகங்கொடுப்பதற்குக் காரணமாக அமைந்தது. எனவே அவர்கள் உணவு வேளையைத் தவிர்த்தல், உட்கொள்ளும் அளவின் குறைத்தல், சொத்துக்களை விற்பனை செய்தல் போன்ற உத்திகளைக் கையாண்டதுடன் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது.

 மேலும் கடந்த ஆண்டு பொதுமக்கள் மத்தியில் எழுச்சியடைந்த போராட்டங்கள் மற்றும் பேரணிகள், அதிகரித்த மின்கட்டணம், வருமானவரி உயர்வு போன்றவற்றுடன் தொடர்புபட்டதாக இவ்வாண்டின் ஆரம்பத்திலும் தொடர்ந்தன.

 இவ்வாறானதொரு பின்னணியில் சீர்குலைவடைந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு இலங்கை இன்னமும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது.

 எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள், பல மணிநேர மின்வெட்டு, எரிவாயு தட்டுப்பாடு என்பன தற்போது முடிவுக்குக்கொண்டுவரப்பட்டிருப்பினும், வழமைக்கு மாறான பணவீக்கத்தினால் பல மில்லியன் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

 அதுமாத்திரமன்றி இப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக வேலையின்மை, சிறுவர் மந்தபோசணை, பொதுச்சுகாதாரக் கட்டமைப்பில் இடைவெளிகள், புத்திஜீவிகள் உள்ளடங்கலாகப் பெருமளவானோரின் புலம்பெயர்வு போன்ற நீண்டகாலப் பாதிப்புக்களுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கின்றது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!