மகிந்த ராஜபக்ஷவை கொல்ல சதி செய்யப்பட்டது : நாமல் ராஜபக்ஷ!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜா உரிமைகளை பல சந்தர்ப்பங்களில் அழிக்க பலர் முயற்சித்ததாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜா உரிமையை இரத்து செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பம் திரட்டும் பிரசாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பல அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குடியுரிமையை ஒழிக்க முயற்சித்ததாகவும், போராட்டத்தின் போது மகிந்த ராஜபக்சவை கொல்ல முயற்சித்ததாகவும், இப்போது குடியுரிமையை ஒழிக்க முயல்வதாகவும் கூறினார்.
பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளால் இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன என்றும் அவர், தெரிவித்தார். மகிந்த ராஜபக்சவுக்கு இன்னும் தனி நபராக வாக்குரிமை இருப்பதாகவும், எதிரணியில் உள்ள அனைவரும் ராஜபக்சவை கண்டு அஞ்சுவதாகவும் நாமல் விமர்சித்துள்ளார்த.
மகிந்த ராஜபக்ச எப்போதும் மக்களுக்காகவே முடிவுகளை எடுப்பதாகவும், பல தலைவர்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் சர்வதேசத்தை மகிழ்வித்ததாகவும், சில தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களையும் வழங்கியதாகவும் தெரிவித்த அவர், மகிந்த மக்களைத் தவிர வேறு யாரையும் மகிழ்வித்து தனது அதிகாரத்தை பாதுகாக்க செல்லவில்லை என்றும் கூறினார்.