யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்
யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஒருவர் தாக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணப் பொலிஸார், தாக்குதலுக்கான காரணத்தை தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குடிபோதையில் வந்த சந்தேகநபர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி உள்ளே நுழைய முற்பட்டமை தாக்குதலை மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமும், தாக்குதலுக்கு உள்ளான நபரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்ட போது, நோயாளர்களை பார்க்கும் நேரம் இதுவல்ல என தெரிவிக்கப்பட்ட போதிலும், குறித்த நபர் குடிபோதையில் இருந்ததோடு, கடுமையான வார்த்தைகளால் தாக்க முற்பட்டதாக போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.