சுமந்திரனுக்கும் ஜுலி சங்குக்கும் இடையில் சந்திப்பு: தமிழர்கள் தொடர்பில் பல பிரச்சனைகள் ஆராய்வு!

#SriLanka #Sri Lanka President #M. A. Sumanthiran #Tamilnews #sri lanka tamil news #United States Ambassador to Sri Lanka
Mayoorikka
10 months ago
சுமந்திரனுக்கும்  ஜுலி சங்குக்கும் இடையில் சந்திப்பு: தமிழர்கள் தொடர்பில் பல பிரச்சனைகள் ஆராய்வு!

நாம் அனைவரும் சமாதானத்தை ஒரு கருத்தியலாக மாத்திரம் கொண்டாடுவதை விடுத்து, அதற்கு செயல்வடிவம் வழங்குவதை முன்னிறுத்தி எமக்கு சவால்விடுவோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.

 சுமந்திரனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. 

சுமந்திரனின் அண்மைய அமெரிக்க விஜயம், மீண்டும் திருத்தியமைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் உள்ளிட்ட சமகாலக் கரிசனைகள் மற்றும் வடக்கில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழி போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அவரது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 அதுமாத்திரமன்றி சர்வதேச சமாதான தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நேற்று முன்தினம் இச்சந்திப்பு தொடர்பில் பதிவிட்டுள்ள ஜுலி சங், 'நல்லிணக்கம் என்பது வெறுமனே மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவது மாத்திரம் அல்ல. மாறாக கடந்தகாலக் காயங்களை ஆற்றுதல், நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பல் மற்றும் நிலையான அமைதியை உருவாக்கல் என்பனவே நல்லிணக்கமாகும்

எனவே நாமனைவரும் சமாதானத்தை ஒரு கருத்தியலாக மாத்திரம் கொண்டாடுவதை விடுத்து, அதற்கு செயல்வடிவம் வழங்குவதை முன்னிறுத்தி எமக்கு சவால்விடுவோம்' என்று வலியுறுத்தியுள்ளார்.

 இதுஇவ்வாறிருக்க சுமந்திரனின் அமெரிக்க விஜயத்தை அடுத்து, கடந்தகால மீறல்கள் தொடர்பில் இலங்கையைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் இராஜாங்க செயலர் அன்ரனி ஜே.பிளின்கனிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவாவுக்குப் பயணமான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அங்கிருந்து அமெரிக்கா சென்று கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.

 அவற்றில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், செனெட் சபையின் வெளியுறவுக்குழு உறுப்பினர்கள், அமெரிக்கத் திறைசேரி அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்புக்களும் உள்ளடங்குகின்றன.

 இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் நாடு திரும்பிய சுமந்திரன் ஜூலி சங்கை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.