திரு. நாதன் கந்தையாவின் தியாகி திலீபன்... கவிதை

தியாகி திலீபன்.
*********************
அகன்று திரண்டொரு அன்பு கனிவொடு
அன்னை வளர்த்தாலும் - பிள்ளை
தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட
எதிரி தடையாக...
எழுந்து நிமிர்ந்தவன் கருவி சுமந்தவன் - புலி
தமிழர் படையாகி...
களங்கள் திறந்தொரு சமரில் உயர்ந்தவன்
தருணம் அது மாறி...
உலகம் வியந்திட விரத மிருந்தொரு
கருணை மனுவோடு...
உடலும் சுருங்கி உயிரும் அடங்கி - திலீபன்
உயிர்க் கொடையின் வரலாறு...
படலை திறந்தொரு
தெருவில் இறங்கிட
பயந்து சிலரோட - நடுத்
தெருவில் பலர் கதை முடிந்து
சாவொரு மலிந்த நிலையாக...
களங்கள் திறந்து சுழன்று சமரிடை
நிமிர்ந்த புலி வீரன்...
உணவு துறந்து துவண்டு இறந்தமண்
கோவிலா காதோ...
திருவில்ப் பிறந்தவன் சிறந்து பயின்றவன்
நீர் உணவை ஒறுத்தேகி...
அகிம்சை வழியொடு அறமும் இணைந்தொரு
தினங்கள் பதினொன்று...
அவன் அறைந்து முழங்கிய மறைகள்
வழிவரும் தமிழன் வரலாறு...
வெல்லும் அறமென எண்ணி அமர்ந்தனன்
திலீபன் வரலாறாய்....
இருள் கவிந்து படர்ந்து சதியோடு
நடந்த வினையேற...
நினைவிழந்த பொழுதிலும் நிறைந்த சதியது
மறந்து தொலையாதே...
கடந்து நிமிருமோ படர்ந்து தணியுமோ
காலம் பதில் சொல்லும்...
குமுறல் விரிந்தொரு சினந்த திலீபனின்
கொள்கை வரலாறாய்...
பிறந்த குழந்தையும் புரிந்து தெளிந்தது
அகிம்சை அதுவென்று....
விதந்து களமதில் அமர்ந்து ஒருதுளி
நீருமரு ந்தாமல்...
குருவி பறந்தது போல அவன் உயிர்
விதந்து விடையாகி..
படர்ந்து விரிந்தது தியாகி திலீபனின் - அறம்
நிறைந்த வரலாறு...
நின்று கனன்றது கண்கள் சொரிந்தது
அவன் வீர வரலாறு...
இன்று நினைவுகொள் வஞ்சம் வென்றநாள்
என்றும் மறவாதே...
வீர காவியம் என்று பதிவுசெய்
திலீபன் வரலாறு...
கருவி களைந்தொரு அறமுள் நுழைந்தவன்
கபட வலையேகி...
நெஞ்சு நிமிர்ந்தொரு நினைவு மறந்திட
நீண்டு சரிந்தானே...
மறைந்த திலீபனின் வீர காவியம்
வந்து களமாடும்...
அஞ்சி நடுங்கிட அன்று ஒருவிடை
வந்து பதிலாகும்...
விண்ணும் அதிர்ந்திடும்
வீரம் நிறைந்தவன் என்று முரசாடு...
வீரன் திலீபனின் வாழ்வின் சரிதமாம்
என்றும் அது வாழும்....
- நாதன் கந்தையா-



