பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது

#Temple #Festival #spiritual #ஆன்மீகம்
Mani
9 months ago
பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்று வருகிறது

சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் கரகம் புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, சிதம்பரம் ரோடு வழியாக கோவிலை அடைந்தனர்.

மதியம் பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, இரவு நேரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வேடமணிந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மஞ்சள் விளையாட்டு விழாவும், நாளை( ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றி உற்சவமும், 24-ந் தேதி(திங்கட்கிழமை) ஊஞ்சல் விழாவும் நடக்கிறது.