அம்மனுக்கு எலுமிச்சை மாலையிடுவதனால் உண்டாகும் பலாபலன்கள்

#spiritual #amman
Mugunthan Mugunthan
9 months ago
அம்மனுக்கு எலுமிச்சை மாலையிடுவதனால் உண்டாகும் பலாபலன்கள்

அம்மனுக்குரிய நாளில் அதிலும் தை மற்றும் ஆடி மாதங்களில் அம்மனை தரிசித்து கோவிலுக்குச் சென்று துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதனால் எண்ணற்ற பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

 ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே ரட்ஷணி ஸ்வாஹ:

 என்கிற மூலமந்திரத்தை, தினமும் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில், அல்லது காலையும் மாலையும் சொல்லி வழிபடலாம். 

சிவாலயத்தில் உள்ள கோஷ்டத்திலும் துர்கை சந்நிதி கொண்டிருப்பாள். அங்கே சென்று அவளுக்கு எதிரே அமர்ந்துகொண்டு, கண்கள் மூடி, மனதுக்குள் இந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருங்கள்.

உங்கள் ஊரின் எல்லைப்பகுதியில் காவல்தெய்வமாகக் கோயில் கொண்டிருக்கும் அம்மனைத் தரிசிக்கவும் அவளை ஆராதிக்கவும் மறக்காதீர்கள். நம் வீடுகளுக்கு காவல் தெய்வமாகத் திகழ்பவள்தான் ஊரில் எல்லையில் கோயில் கொண்டிருக்கிறாள். நம்மூர் எல்லையில் காவல் காப்பவளை விடுத்து, வேறு எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டாலும் நமக்கு பெரிய பலன்களைக் கொடுக்காது என்று உறுதிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

 வாழ்வில், தெரிந்தோ தெரியாமலோ எவரையேனும் மனதளவில் காயப்படுத்தியிருந்தாலோ, அவர்களின் பொருட்களை அபகரித்திருந்தாலோ, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கிராம தேவதைகளிடம் நின்று ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டால் போதும்… நம்மை மன்னித்துக் காத்தருளுவாள் தேவி.

 ‘இனி எவரையும் எள்முனையளவும் காயப்படுத்தவோ வேதனைப்படுத்தவோ மாட்டேன். உனக்கு வழங்கும் சர்க்கரைப் பொங்கலை இன்னும் இனிப்பாக்கிக்கொள் எங்கள் தேவதையே’ என்று கிராம மக்கள், தை செவ்வாய்க்கிழமைகளில், படையலிடுவது இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது.

ஆடி செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று அவளை வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு துர்க்காதேவி மூலமந்திரம் சொல்லி, எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிப்பாருங்கள். உங்கள் இன்னல்களையெல்லாம் போக்கிடுவாள் தேவி.