கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளமுடியாது: அரசாங்கம்
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையாக உள்ளதால், அதனை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின் தலைவர் சரத் வீரசேகர நேற்று (09) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இந்த துறைசார் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என ஆளும் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த நிலையில், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டாம் என துறைசார் கண்காணிப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை அரசாங்கம் நிராகரிக்கும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட துறைசார் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அன்றைய தினம் (09) அனுப்பி வைக்க ஆளும் கட்சி அலுவலகம் நடவடிக்கை எடுத்திருந்தது.