செஞ்சிலுவை சங்க தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
கொழும்பில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற தெற்காசிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் தலைவர்கள் மாநாடு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
உலக அனர்த்த அறிக்கை 2022 இன் வெளியீடும் இந்த மாநாட்டில் இடம்பெற்றதுடன், அதன் பிரதியும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவைச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க, பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் அலெக்சாண்டர் மேத்யூ மற்றும் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.