சி.வி.விக்னேஸ்வரன் சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கின்றாரா?
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தென்மராட்சியைச் சேர்ந்த அருந்தவபாலனின் சாதியைக் குறிப்பிட்டதுடன், நீங்கள் என்ன சாதியெனக் குறிப்பிட முடியுமா என தனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
உண்மையில் அப்படி அவர் அப்படி கேட்டிருந்தாரா என ஆராய்ந்த போது, அப்படி கேட்டதாகவும் அதற்கு விக்னேஸ்வரன் விளக்கம் அளித்ததாகவும் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தனபாலசிங்கம் சுதாகரன் ஒரு விளக்கம் அளித்திருக்கின்றார்.
அதில் விக்னேஸ்வரன் சுதாகாரனுக்கு அளித்த பதில் வருமாறு:
“நல்லது. நீங்கள் நேரடியாக என்னை கேட்டுள்ளீர்கள். என்னால் விளக்கம் தர முடியும். ஆரம்ப காலத்தில் நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். ஐங்கரநேசனின் தாவரவியல் மற்றும் சூழலியல் தொடர்பான ஆளுமைமீது எனக்கு மிகவும் மதிப்பு இருந்தது. ஆம், தனிப்பட்ட மின்னஞ்சலில் சாதி தொடர்பில் கேட்டேன்.
யார் என்ன சாதி என்று எனக்கு தெரியாது. ஆட்களுடன் தொடர்புகொள்ளும் போது சாதியை பார்த்ததில்லை. இப்போதும் நான் சாதி பார்ப்பதில்லை. நான் வெள்ளாளரைவிட குறைந்த சாதியினரை நம்புவதாக என்னுடன் நெருக்கானமானவர்கள் ஒரு குற்றசாட்டை என்மீது வைத்தனர். எனது உறவினர்கள்கூட இதைச் சொன்னார்கள். அருந்தவபாலன் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்றும் வேறு சிலரையும் குறிப்பிட்டார்கள்.
அதில் ஐங்கரநேசனின் பெயரும் இருந்தது. நான் என்னுடைய அலுவலக பணியாளர்களிடம் ஐங்கரநேசனின் சாதி தொடர்பில் கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.
ஆகவே ஐங்கரநேசனிடமே அவரது தனிப்பட்ட மின்னங்சலில் அவரது சாதியைப் பற்றிக் கேட்டேன். அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை. ‘ஆகவே அவர் வெள்ளாளர் இல்லை’ என முடிவு செய்தேன். அவர் என்ன சாதியாக இருந்தாலும் அவர்மீது மரியாதை வைத்தே இருக்கிறேன்… "
என விக்னேஸ்வரன் சுதாகாரனுக்கு பதில் வழங்கியிருந்தார்.
இதிலிருந்து ஒரு உண்மை புரிகின்றது. விக்னேஸ்வரன் சாதி பற்றி ஐங்கரநேசனிடம் கேட்டிருக்கின்றார்.
அந்தவகையில் இதிலிருந்து விகேஸ்வரனின் உண்மைமுகம் வெளிப்படுகின்றது. இவ்வளவு காலமும் தமிழ்த்தேசியம் என வெளி வேஷம் போட்டுக்கொண்டு சாதியம் என்னும் போர்வைக்குள் இருந்து அரசியல் செய்துள்ளார்.
விக்னேஸ்வரனுக்கு ஒன்றுமட்டும் புரியும் தான் உயர்சாதியினரின் வாக்குக்களினால் மட்டும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது.
விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலில் சாதியம் வேரூன்றி உள்ளது. சம்பந்தன் விக்னேஸ்வரனை மேட்டுக்குடி என்ற காரணத்தினால் அரசியலில் இறக்கினார் என்பது வெளிப்படையான உண்மை.
இந்த அணுகுமுறையோடுதான் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றார் என்பதும், சிறிய காலத்துக்குள்ளேயே வெளிப்பட்டுவிட்டது.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் வடக்கில் உள்ள புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் விக்னேஸ்வரனை தமிழ்தேசியவாதியாக சித்தரிப்பதற்கு தமிழ்மக்கள் பேரவை ஒன்றை உருவாக்கி அதற்கு அவரை தலைமை ஆக்கினார்கள்.
இது தமிழ் தேசியத்தின் ஒரு அவலநிலை. இந்த பேரவையின் மூலமாக விக்னேஸ்வரனை தமிழ்த்தேசியத்தின் அடுத்த கட்ட தலைவர் என்னும் ரீதியில் சித்தரிக்க முயன்றனர்.
ஆனால் அவரின் உண்மை முகம் என்னவென்று அவர்களுக்கு புரிந்திருக்குமோ என்னவோ. உண்மையில் தமிழ்தேசியத்திற்குகாகவும் தமிழ் இனத்திற்காகவும் சாதி மதங்களை கடந்து உயிர்தியாகங்களை செய்த இளைஞர்கள் வாழ்ந்த மண்ணில் ஈன அரசியலிற்காக சாதிப் பாகுபாட்டை விதைத்து, அந்த இனத்தை சின்னாபின்னமாக்கி பின்னோக்கி இழுப்பது எவ்வளவு துரோகமானதும் அநீதியான செயலுமாகும்.
ஒரு நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் இவ்வாறு செய்வது எந்த வகையில் நியாயமாகும்.
ஆகவே சாதி, மதம் கடந்து இனத்தை ஒன்றிணைத்து செயற்படாவிட்டால் தமிழ் மக்கள் எந்த விடுதலையையும் பெற்றுவிட முடியாது என்பது யதார்த்தமான உண்மை.