இரகசியமாக வெளிநாட்டுக்கு சென்ற 50 வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில்

கடந்த ஒன்பது மாதங்களுக்குள் சுகாதார அமைச்சின் முறையான அனுமதியின்றி வெளிநாடு சென்ற 352 வைத்தியர்களில் 50 பேர் சேவையிலிருந்து விலக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த வைத்தியர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தூதரகங்கள் ஊடாக அந்த நாடுகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.
தகவல் தெரிவிக்காமல் வெளிநாடு சென்ற மருத்துவர்களில் 50க்கும் மேற்பட்டோர் சிறப்பு மருத்துவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
150 இலட்சம் ரூபாவுக்கு மேல் செலவழித்து வெளிநாட்டில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பும் புதிய வைத்தியர்கள் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் வெளிநாடு செல்வதாக வைத்தியர் அத்தபத்து தெரிவித்தார்.
மருத்துவ மாணவர் ஒருவரை மருத்துவராக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கம் கிட்டத்தட்ட 100 இலட்சம் ரூபாவைச் செலவிடுவதாகவும் மேலும் 150 இலட்சம் ரூபாவை வெளிநாட்டில் நிபுணத்துவ அறிவைப் பெறுவதற்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் செலவழிப்பதாக டொக்டர் பிரியந்த அத்தபத்து கூறுகிறார்.
இந்நாட்டு மக்களுக்கு சேவையாற்றாமல் இவ்வாறு அதிகளவான நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து இரகசியமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் போதிய வருமானம் இன்மையால் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக கடினமான மாகாணங்களில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வைத்தியர் அத்தபத்து தெரிவித்தார்.



