போசாக்கு அற்ற சிறுவர்களில் யாழ்ப்பாணம் முன்னிலை - வடக்கு ஆரம்ப பிரிவு உதவி கல்விப் பணிப்பாளர் சற்குணராஜா தெரிவிப்பு

இலங்கையில் போசாக்கு அற்ற சிறுவர்கள் உள்ள மாகாணமாக வட மாகாணம் காணப்படுகின்ற நிலையில் அதிலும் யாழ்ப்பாணத்திலே அதிகமான சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆரம்பப் பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் ஏ. எஸ்.சற்குணராஜா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சிறுவர்களின் உணவு ஆரோக்கியம் தொடர்பான புள்ளி விபரங்களில் வட மாகாணத்தில் சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டால் காணப்படுவது புள்ளிவிபரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் சிறுவர்களுக்கு அதிகம் மாப்பொருளை அடங்கிய உணவுகளையே பெற்றோர்கள் தினமும் வழங்குகிறார்கள்.
இதன் காரணமாக சிறுவர்கள் வெளித்தோற்றத்திற்கு பொலிவானவர்களாக காணப்பட்டாலும் உடலுக்கு தேவையான புரதம் ,கொழுப்பு, அயன் போன்ற சத்துக்கள் குறைவாகவே காணப்படுகிறது. மன்னார் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் சிறுவர்களின் போசாக்கு மட்டும் சாதகமான குறிகாட்டியே காட்டுகிறது. ஏனெனில் குறித்த மாவட்டத்தில் மாப்பொருள் சார்ந்த உணவுப் பொருட்கள் குறைவாகவே கிடைக்கும் நிலையில் கடல் உணவு சார்ந்த உணவுகள் அதிகமாக கிடைப்பதனால் அவர்களின் போசாக்கு மட்டும் அதிகரித்து காணப்படுகிறது.
சிறுவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினர் அவர்களின் உடல் உள ஆரோக்கியம் தொடர்பில் முன்பள்ளிப் பருவத்தில் இருந்தே கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சிறுவர்களின் மூளை வளர்ச்சி 4 வயது தொடக்கம் 7 வயது வரை வளர்ச்சி போக்குகள் காணப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கிரகித்தல் ஆற்றலையும் வளர்க்க வேண்டும். அனேகமான பெற்றோர்கள் முன்பள்ளியில் தமது பிள்ளைகள் கொப்பியில் எழுத வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் அவ்வாறான விடயங்கள் சிறுவர்களுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல.
வட மாகாணத்தில் சுமார் ஆயிரம் அறுநூறு முன்பள்ளிகள் காணப்படும் நிலையில் சகல முன்பள்ளிகளிலும் உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் மூன்று மாத காலத்திற்கு சத்துணவு திட்டத்தை வழங்குகிறோம்.
உலக வாங்கியின் தட்டாம் உரிய காலப் பகுதியில் நிறுத்தப்பட்டாலும் சிறுவர்களுக்கான சத்துணவை எவ்வாறு தயாரித்து வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஆகவே முன்பள்ளியில் கிடைக்கும் சத்துணவு திட்டத்தை தவறாது மாணவர்களுக்கு பெற்று கொடுத்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



