21340 கிலோ கழிவு தேயிலையுடன் இரண்டு லொறிகள்: மூவர் கைது

ஹட்டன் திம்புல பத்தனை ருவன்புர பிரதேசத்தில் இருந்து தம்புள்ளைக்கு அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட 21,340 கிலோ கழிவு தேயிலையுடன் மூன்று சந்தேகநபர்கள் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பிரதேசத்தில் காணி ஒன்றை குத்தகை அடிப்படையில் எடுத்து கழிவு தேயிலை கடத்தலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தோட்டங்களுக்கு அருகில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் இருந்து கழிவு தேயிலையை எடுத்து வந்து சேமித்து வைத்துள்ளார்.
தம்புள்ளை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு லொறிகள் மூலம் கழிவு தேயிலைகள் நீண்ட காலமாக மிகவும் அவதானமாக கொண்டு செல்லப்படுவதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்
இரண்டு லொறிகளிலும் 14,000 கிலோ கழிவு தேயிலை ஏற்றப்பட்டதாகவும், மீதமுள்ள கழிவு தேயிலை அதே காணியில் உள்ள களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கழிவு தேயிலையின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படாத நிலையில், இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய பிரதான சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இரண்டு லொறிகளின் சாரதிகள் இருவரும் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் சுற்றிவளைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.



