அமெரிக்காவின் தடை சட்டவிரோதமானது: மனித உரிமை மீறல் - ஜூலி சுங்கிற்கு கர்ணகொட கடிதம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே. பில்லிங்கன் தன்னையும் தன் மனைவியையும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து வெளியிட்ட அறிவிப்பு முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அவரது அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறுவதாகவும் சுட்டிக்காட்டி கடற்படையின் முன்னாள் தளபதியும் வடமேற்கு மாகாண ஆளுநருமான அட்மிரல் வசந்த கர்ணகொட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை வசந்த கர்ணாகொட நேற்று முன்தினம் (01) கொழும்பு ஹோர்டன் பிளேஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்தார்.
மேலும், அமெரிக்க சட்டத்தின்படி ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க வேண்டும் என்றும், ஆனால், அமெரிக்க இராஜாங்கச் செயலர் இது தொடர்பாக சட்டரீதியாக செயல்படவில்லை என்றும் கர்ணகொட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்ட விரோதமான அறிவிப்புக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதற்காக அமெரிக்க அரச திணைக்களம் அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டு சரத்துக்களை உள்ளடக்கி இலங்கை ஊடகங்களுக்கு வெளியிட்டு இலங்கை மக்களை கடுமையாக தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் கர்ணகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவ்வாறு செயற்பட்டு அமெரிக்க அரசியலமைப்பை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ள கர்ணகொடஇ அவ்வாறு செயற்பட்டதன் மூலம் தனது கௌரவம் மற்றும் நற்பெயருக்கு எதிராக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைக் குற்றச்சாட்டை முன்வைத்து இவ்வாறு செயற்படுவது அமெரிக்காவும் அங்கீகரித்த சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் 17வது சரத்தை பாரிய மீறல் என வசந்த கர்ணகொட அமெரிக்க தூதுவரிடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



