பொருளாதார நெருக்கடி: மருந்துகளின் விலையை உயர்த்திய பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மருந்துகளின் விலையை உயர்த்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, அத்தியாவசியமற்ற மருந்துகளின் சில்லறை விலை 20 சதவீதத்தாலும், அத்தியாவசிய மருந்துகளின் விலை 14 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக மருந்துப் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதியில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மருந்து உற்பத்தியை தொடர வேண்டுமானால், மருந்துகளின் விலையை அதிகரிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தனர்.
எவ்வாறாயினும், மருந்து உற்பத்தியாளர்கள் மருந்துகளின் விலையை உயர்த்திய சதவீதம் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பொதுத் தேர்தலை முன்னிட்டு மருந்துகளின் விலையை அதிகரிப்பது சவாலான விடயம் என்பதால், மருந்துகளின் விலையை மேலும் அதிகரிக்க பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



