போக்குவரத்து காவல் அதிகாரிக்கு கத்தியை காட்டி மிரட்டிய இருவர்

வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியை காட்டி அச்சுறுத்திய இருவர், மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உரும்பிராய் சந்தியில் நேற்று முன்தினம் மாலை வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர்.
அப்போது அந்த இருவரும் பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியை காட்டி, மிரட்டியுள்ளதோடு, அவர்கள் தமது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை என்பவற்றை அவ்விடத்திலேயே கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்
அவ்வாறு அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டையை தம்வசம் எடுத்த பொலிஸார், அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்கின்றனர்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் வெளியில் எடுப்பதற்கு பல மட்டங்களினூடாக முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



