இலங்கையிடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு எழுப்பியுள்ள கேள்வி

மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு, தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் மேற்கொள்ளப்படும் அநாவசியமான தலையீடுகள், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் நிறைவேற்றதிகாரத்தின் பங்கு என்பன தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு தமது திருப்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் குடியியல்; மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் சிறிலங்கா தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்தொடர் கடந்த 8 - 9 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்றது.
இதன்போது குறிப்பாக உள்நாட்டுப்போரின்போது இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய மீளாய்வுக்குழு உறுப்பினர்கள், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 92 சதவீதமான காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமையையும் வரவேற்றனர்.
எனினும் போர்க்குற்றங்களும், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களும் உள்நாட்டு சட்டத்தில் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதா?என்று மனித உரிமைகள் மீளாய்வுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



