அமைச்சரவையின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்ட விலங்குகள் நல மசோதா: 6 ஆண்டுகளாக கிடப்பில்...!

அமைச்சரவையின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்ட 'விலங்குகள் நல மசோதா' 6 ஆண்டுகளாகியும் இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை என்று சுற்றுச்சூழல் நீதி மையத்தின் தலைவர் மூத்த வழக்கறிஞர் டாக்டர் ரவீந்திரநாத் தாபரே தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள விலங்குகள் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டு புதிய பல விதிகளை உள்ளடக்கிய வரைவாக 2016ஆம் ஆண்டு 'விலங்குகள் நலச் சட்டம்' தயாரிக்கப்பட்ட போதிலும் அது இன்னும் சட்டமாக மாறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிருகங்களுக்கு வன்கொடுமை, கொலைகள் போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், தற்போதுள்ள சட்டங்கள் சட்டத்தை அமுல்படுத்தும் அளவிற்கு வலுவாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1907 ஆம் ஆண்டு காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலான விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் தற்போதைய அமைப்பில் பயனற்றது என்றும் அவர் கூறினார்.
விதிக்கப்பட்ட தண்டனைகள் இன்றுவரை இல்லை என்றும், சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் நூறு ரூபாய் என்றும் வழக்கறிஞர் ரவீந்திரநாத் தாபரே கூறினார்.
மேலும், புதிய மசோதாவில் 'மிருகம்' என்பதன் வரையறை, 'மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும்' என விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் அனைத்து விலங்குகளின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இதன் கீழ் 'தேசிய விலங்குகள் நல ஆணையம்' அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், இந்தச் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.



