தற்போதைய வரிக் கொள்கை சீர்குலைந்தால் IMF உடன் இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையல்ல, மீட்பு நடவடிக்கை எனவும், இந்தச் செயற்பாடு சீர்குலைந்தால், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடியாது எனவும், இலங்கைக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையே என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று பிற்பகல் நடைபெற்ற "2023 வரி உச்சி மாநாட்டின்" ஆரம்ப உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்திற்கு வேறு எந்த நிறுவனமோ, கட்சியோ அல்லது நபரோ முன்மொழிவுகளையோ அல்லது மாற்றீடுகளையோ சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டவுடன், அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அதனை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ எவருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எந்தவொரு தரப்பினரும் அதனை நிராகரித்தால் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்று முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பிரதான கடனாளிகளான பரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கான நிதியுதவியை வழங்க பரிஸ் கிளப் தற்போது உத்தரவாதம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தியாவும் அதன் சொந்த முறையைப் பின்பற்றுகிறது, ஆனால் சீனா அதன் முறையை இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் பெங்களுரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களுடனான கலந்துரையாடலில் தமது ஸ்திரத்தன்மையை அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.



