இந்த வருடத்தின் நடுப்பகுதியில் 2,609 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டும்!

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 2,609 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக் கடனாக இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை இதுவரை இருதரப்பு மற்றும் பத்திர கடன்களை மட்டுமே செலுத்துவதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு கடன்களை செலுத்துவதை நிறுத்தவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்புகளுக்குள் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை திறைசேரி செயலாளரிடம் ஒப்படைத்து அதற்கான நிதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.



