தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது ஆபத்தான முன்னுதாரணமாக அமையலாம் - மல்கம் ரஞ்சித்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது ஆபத்தான முன்னுதாரணமாக அமையலாம் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று எச்சரித்துள்ளார்.
வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நம்பிக்கையை இழக்க நேரிடும்.
எனவே வங்குரோத்தில் உள்ள இலங்கைக்கு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகள்; வழங்கி வரும் உதவிகளை தடுக்கவேண்டாம் என்று கர்தினால் அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
இந்தநிலையில் தேசத்தின் நலனுக்காக முன்வருவது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமை என்று அவர் மேலும் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ள கர்தினால்,உரிமை என்பது மக்கள் தங்கள் இறையாண்மையை நடைமுறையில் பயன்படுத்த பயன்படுத்தும் ஒரு கருவியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது ஜனாதிபதியின் கடமையாகும்.
ஜனாதிபதியும் அரச ஊழியர்களும் இந்த கடமைகளில் இருந்து தவறினால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்று கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.



