சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை: ஜனாதிபதி

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று யோசனைகள் இருப்பின் அவற்றை சர்வதேச நாணய நிதியத்தில் முன்வைக்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சரியான திட்டம் இருக்க வேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டம் காரணமாக கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இவ்வாறு வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில், கண்டி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல் கட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்துடன் எவராலும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார்.



