பிரதான வீதியில் 4 அடி ஆழத்தில் கொலைக்குழி - கண்மூடித் தூங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை

யாழ்ப்பாணம் - காரைநகர் 782 இலக்க வழித்தட வீதியில் சுமார் 4 அடி ஆழத்திலும் 6 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் பாரிய குழி ஒன்று உள்ளது. இந்த குழியானது மூளாய் பிள்ளையார் கோவிலில் இருந்து சுமார் 150 மீற்றர் வடக்குப் பக்கமாக உள்ளது.
இந்த குழிக்கு எந்தவிதமான பாதுகாப்பு காட்சிப் பதாதைகளோ அல்லது அடையாளங்களோ வைக்கப்பட்டால், குழியானது வீதியின் அரைவாசி பகுதியில் நீண்டவாறு உள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கு தொடங்கும்போது கீழே குழாய் புதைப்பதற்கு இந்தக் குழியை தோண்டியுள்ளனர்.

இருப்பினும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவிதமான புனரமைப்புகள் செய்யப்படவுமில்லை, பாதுகாப்பு எச்சரிக்கைகள் போடப்படவுமில்லை என்பதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வீதியை திருத்தம் செய்கின்ற போர்வையில் வீதியை மேலும் மோசமான நிலைக்குள் தள்ளியுள்ளனர்.
ஆகையால் இந்த வீதியில் பயணம் செய்பவர்கள் உயிரை கைகளில் பிடித்தவாறு பயணம் செய்கின்றனர். அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாகனங்களின் உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த வீதியில் பயணம் செய்யும்போது வாகனங்கள் விரைவில் சேதமடைகின்ற சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன.

இது குறித்து மக்கள் தமது அசௌகரியங்களையும் விசயங்களையும் வெளியிடுகின்றனர். இனியாவது வீதி அபிவிருத்தி அதிகாரசபை தூக்கத்தில் இருந்து எழாதா என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர்.



