மின் கட்டண திருத்தம்: PUCSL இற்கும் மின்சார சபைக்கும் இடையில் இணக்கப்பாடின்றி முடிவடைந்த கலந்துரையாடல்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மின்சார சபைக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று தேசிய சபை கூடிய போது இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இதனை தெரிவித்ததாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட 02 தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்குமாறு தேசிய சபை நேற்று அறிவித்தது.
அதன்படி நேற்று பிற்பகல் இரு கட்சிகளின் அதிகாரிகள் கூடி மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடியதுடன், இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட முடியாது என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தேசிய சபைக்கு அறிவித்துள்ளனர்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று கூடி இது தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தேசிய சபை கூடிய போது, மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதன்படி, இது தொடர்பில் நாளைய தினம் தீர்மானம் எடுக்கப்படும் என நம்புவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.



